20 October 2012

நித்தியின் டயரியிலிருந்து......!!


                         கடந்த ஏப்ரல் மாதம் மதுரை இளைய ஆதினமாய் நியமிக்கப்பட்ட நித்தியானந்தா, நேற்றைய தினம் ஆதீன முதல்வர் அருணகிரிநாதர் அவர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந் நிலையில் நித்தியானந்தா டயரி எழுதினால் இப்படித்தான் இருக்குமோ???




சிவனே என்றிருந்தேன்
சீண்டிப் பார்த்துவிட்டார்கள்!
கேட்காமல் கொடுத்துவிட்டு
சொல்லாமல் பறித்து விட்டார்கள்!

அவசியமெனில் விலகுகிறேன் என
அடிக்கடி அறிக்கை விட்டபடி
இப்படியே இப் பதவியில்
நிலைத்துவிடலாம் என்றல்லவா
நினைத்திருந்தேன்!!

இளைய ஆதீனமாய் இருந்து
இன்னும் எத்தனை பிகரை
கவுத்துவிடலாம் என்று
கணக்கு போட முன்பே - பதவியை
கவுத்து விட்டார்களே....!

ஆதினமே உந்தன்
அவசரமான முடிவுக்கு
கற்பிக்க போகும்
காரணம் யாதோ??

அருணகிரியே....- உனக்கு
அனுப்ப வேண்டிய பணத்தில்
அறியஸ் வைத்ததால் தான்
அதிரடியாய் தூக்கி விட்டாயோ?

தமிழ் நாட்டு அரசியல்
தலையிட்டதால் - கொஞ்சம்
தவித்துப் போய்விட்டாயோ?

பிரபல சீடர்கள் பெருகும் - இந்த
பிஸியான நேரத்தில்
பதவியை பறித்து விட்டால்
பக்தைகளுக்கு என்ன
பதில் சொல்வேன்?

ரஞ்சிதாவுக்கு மேலாக – நடிகை
கௌசல்யாவுக்கும் பதவி
கொடுத்து தொலைத்துவிட்டேன்.
எப்படித் தான் இவர்களை
எதிர்கொள்ளப் போகிறேனோ?

அவமானங்னள் கண்டு
அஞ்சிப் போய்விடவில்லை
ஏனென்றால் - இவையொன்றும்
எனக்குப் புதிதில்லையே!

அன்பு பக்தர்களே,
அருள் வாக்கு கூறுகிறேன்
அவதானமாய் கேளுங்கள்

'அழகாய் இருப்பவர்கள்
ஆன்மீகத்தை தேர்ந்தெடுத்தால்
அன்பர்களுக்கும் கஷ்டம்,
அவனுக்கும் கஷ்டம்'

எந்தன் நிலை கண்டு
எவருமே வருந்த வேண்டாம்
எந்தன் புகழ்
என்றுமே அழியாது.

புகழ் மங்கிப் போய்விட்டால்
புதிதாய் ஒரு CD வெளியிட
இன்னோர் ரஞ்சிதாவோ...
இல்லை ஆர்த்தி ராவோ...
இல்லாமலா போய்விடுவார்கள்???




-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்-




3 October 2012

தாஜ்மஹாலுக்கு பின்னால்....!!


                         ஷாஜகான்-மும்தாஜ் காதலின் நினைவுச் சின்னமாய் நிமிர்ந்து நிற்கும் தாஜ்மஹாலின் பின்னால், மறைக்கப்பட்ட இன்னோர் உண்மைக் காதலின் கண்ணீர் காவியம் இது! பா.விஜயின் உடைந்த நிலாக்கள் கவிதை தொகுப்பில் இருந்து....!! ஷாஜகான் மும்தாஜ் என்ற உடைந்த நிலாக்களுக்காக உடைக்கப்பட்ட நிலாக்கள் தான் ஹரின்-திலோத்தி

                      கவிதை ஒரு காவியமாய் சிறிது நீண்டு சென்றாலும் வாசித்து முடித்ததும் இரு கண்ணீர் துளிகளை பரிசளிக்க தூண்டும் உணர்வுடன் பா.விஜயினால் வடிக்கப்பட்டுள்ளது! 





தாஜ்மஹாலுக்கு பின்னால்....!!

காதல் என்பது அஹிம்சை அல்ல,
தீவிரவாதம்!
காதல் என்பது சரணாகதியல்ல,
தன்னை உருக்குதல்!

உலகில் எல்லா நதிகளும்
சிரித்துக் கொண்டுதான் ஓடுகின்றன!
அழுது கொண்டு ஓடும் ஒரே நதி
யமுனை நதிதான்!

மும்தாஜ் என்ற
முப்பத்தேழு வயதுப் பௌர்ணமி
உதிர்ந்ததிலிருந்து ஷாஜகான்
கண்களில் கண்ணீர் என்ற
நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டிருந்தன.

சிறகுகள் இல்லாத
பறவையாய் மும்தாஜின்
கல்லறை!
கல்லறை அருகே பறவையல்லாத
அறுந்த சிறகாய் ஷாஜகான்!

ரத்தத்தில் நுரை பொங்க நுரை பொங்க
காதலில் ஷாஜகான்
கண்களில் கரை பொங்க கரை பொங்க
உயிர் சிந்துகிறார்.

'என் கண் ஒரு மலராய்
இருந்திருந்தால்,கல்லறை மீது
பறித்து வைத்திருப்பேன்'
முனகியபடி கல்லறையின்
கால்மாட்டில் அமருகிறார்.

ஷாஜகான் கண்களில் திரளுகின்ற
ஒரு நட்சத்திரம்
கல்லறை மீது சொட்டுகிறது.
கல்லறை கற்கள் சிலிற்கின்றன!
நடந்தது இதுவே!

ஷாஜகான் ஒரு கல்லை செதுக்கினார்!
மும்தாஜ் என்ற சிற்பம் கிடைத்தது!
சிற்பம் உடைந்துவிட்டது!
செதுக்கியவன் கல்லாகிவிட்டான்!

பேரரசர் ஜஹாங்கீர் ஷாஜகான்
உயிர்த்தெழ வேண்டுமெனில்
அவர் 'கனவு' கனவாகிவிடக் கூடாது.
மும்தாஜூக்கு மஹால் எழுப்ப வேண்டும்!

மாலை!
சூரிய கிரணங்கள் விண்ணில்
வர்ணகலா வித்தை செய்கிறது!

யமுனை நதி
மொஹலாய சாம்ராஜ்யம் போலவே
மௌனம் அனுஷ்டிக்கிறது!

அமைச்சரும் நண்பருமான ஆசிப் வருகிறார்!
அவருக்கு புரிகிறது!
ஷாஜகான் என்ற கப்பல்
மூழ்கத் தொடங்கிவிட்டது!
அந்தக் கப்பலுக்கு மும்தாஜ் தானே கடல்!

ஏழு லடசம் வீரர்களின் தலைவன்
பாழடைந்து உடகார்ந்து இருக்கிறான்!

ஒரு ராஜாதிராஜ தரிசனம்
சருகாய் காட்சி அளிக்கிறது.

பேரரசே' அழைக்கிறார் ஆசிப்.
மும்தாஜோடு பேசிக்கொண்டிருந்த
ஷாஜகான் திரும்புகிறார்!
மும்தாஜ் காற்றில் கரைகிறாள்!

பேரரசர் ஒரு பூவை எடுத்து வீசி
கல்லறையின் மீது அமர்ந்த ஓர்
ஈயைத் துரத்திவிடுகிறார்!

மொகலாய சிங்கம்
உடல் பொருள் ஆவி ஒடுங்கிக்
காணப்படுவதில் கண் கசிகிறார் ஆசிப்!

'ஹெசூர்! தங்கள் உடல் நலம்
பரிசோதிக்க வைத்தியர் வந்திருக்கிறார்'
ஷாஜகானின் மூடிய விழிகள் திறக்கின்றன!
கண்களுக்குள் வெறுமை!

'நீ என் நண்பனா?' சிங்கம் கர்ஜிக்கிறது!
'சொல் நீ என் நண்பனா?'
சிங்கம் இருமியபடி உறுமுகிறது!
ஆசிப் திணறுகிறார்!

'நீ என் நண்பனாக இருந்திருந்தால்
வைத்தியனையா அழைத்து வந்திருப்பாய்?
எமனையல்லவா அழைத்து வரவேண்டும்!'
ஷாஜகான் கண்மூடித் திறந்தார்
வெறுமை மறைந்தது!

'நண்பனே! எனக்கான வைத்தியன்
அதோ வருகிறான் பார்'

அனைவரும் நோக்கினர்!

பேரரசர் காட்டிய திக்கில்
கையில் மாதிரி ஓவிய சுருளுடன்
மான் போல் வந்து கொண்டிருந்தான்
ஓவியன் ஹரின்!

'ஆலம்பனா!' அழைக்கிறான்
அந்த இளம் வயது ஓவியன் ஹரின்!
ஷாஜகான் ஹரினை பார்க்கிறார்!
'மும்தாஜ் மஹால்' என்கிறார்!

ஹரின் தான் வரைந்த மாதிரி ஓவியத்தை
ஆலம்பனாவிடம் சமர்பிக்கிறான்!
ஷாஜகான் அதில் மூழ்குகிறார்!
அனைவரும் அசந்தனர்!

ஆனால் கண்களை தாளிட்டுக்
கொள்கிறார் அரசர்!
இது நான்காவது மாதிரி ஓவியம்!
இதுவும் சரியில்லையா?
ஹரின் வாடுகிறான்!

'ஓவியம் அழகாக இருக்கிறது!
மும்தாஜ் அழகாக இருப்பாள்!
ஓவியம் சோகமாக இல்லை!
நான் சோகமாக இருக்கிறேன்!
மும்தாஜையும் என்னையும் கலந்து
ஒரு ஓவியம் தேவை!'
ஷாஜகான் இதைத்தான் சிந்தித்தார்!

'மும்தாஜ் ஒரு பேரழகி!
அழகை ஓவியமாக்கினேன்!
மும்தாஜ் ஒரு மொஹலாஜ ரோஜா!
ரோஜாவை ரோஜாவால் வரைந்தேன்!

ஏன் அரசருக்கு அது பிடிக்கவில்லை?
அவர் உயிரை ஏன் என் ஓவியம்
தொட்டு தடவி சிலிர்க்கவில்லை?'
ஹரின் இதைத்தான் சிந்தித்தான்!

இறகாய் சென்றவன்
விறகாய் இல்லம் திரும்புகின்றான்!

புது மணவாழ்வு
திலோத்தி பூக் கூடையோடு
வெளிப்பட்டுப் புன்னகைக்கிறாள்!

பல் தெரியாது புன்னகைக்கும் பெண்!
ஓ.. இவள் சாருஹாசினி வகை!
விறகு மீண்டும் இறகாகிறது!
ஹரின் திலோத்தியை கண்களால்
கிள்ளுகிறான்! அவள் ஓடுகிறாள்!

பூக் கூடை கீழே விழுந்து
பூக்கள் சிதறுகின்றன!
ஹரின் துரத்துகிறான்!
இறைந்த பூக்களை காண்கிறான்!

'ஏய் புன்னகையிலிருந்து பூக்களை கொட்டிவிட்டு
எங்கே ஓடுகிறாய் திலோத்தி?'
திலோத்தி என்ற பதினாறு வயதுப்
பாற்கடலை ஹரின் என்ற ஓவியனின்
உதடுகள் குடிக்கத் துவங்குகின்றன!

பெண் கடலைக் குடித்து
முடித்தவர் யார்?

முற்றுப் புள்ளிகள் இல்லாமல்
கதை எழுத முத்தங்களால்
மட்டும் தானே முடியும்! எழுதினான்...
எழுத எழுத இசையும் கவிதையும்
புறப்பட்டது!

ஹரினின் உதடுகள் விடுதலையாகின்றன
திலோத்தியின் மேனி விடுவிக்கப்படுகிறது!

நீலம் பூத்த மங்கிய இருள் விலகி
கண்களுக்குள் ஒளி தோன்றுகிறது!
ஹரின் துள்ளிப் பரவுகின்றான்.

திலோத்தி எரியும் தன் உதடுகளுக்குப்
பாலாடை தடவியபடி,
ஹரினை குறும்பாய் நோக்குகிறாள்!
புரிந்த ஹரின் சிரிக்கிறான்!

'மலரே இதழில் காயமா?'
அவள் வெட்கத்தால் சில்லென்று ஒரு
கவிதை பூக்கிறாள்!

மீண்டும் ஒரு மன்மதலீலை
சொர்க்கத்தின் கதவை தட்டுகிறது!
அப்போது ஒரு ராஜாங்க ஓலை
ஓவியனின் வீட்டைத் தட்டுகிறது!
இன்பத்தில் மூழ்கிய தம்பதிகளுக்கு
கதவு தட்டும் ஓசை எட்டுகிறது!
ஹரின் மனம் கதவை திட்டுகிறது!

திறந்தான் கதவை – ஓலை!
பிரித்தான் ஓலையை – செய்தி!
படித்தான் செய்தியை - ஹரின்
திகைத்தான்! மிரண்டான்!
திலோத்தியும் ஓலையை படித்தாள்!

'மொகலாய பேரரசு அமைச்சர்
ஆசிப்பின் கட்டளை!
இன்னும் ஒரே ஒரு ஓவியம் தான்
நீ வரையலாம்
அது அரசர் மனம்படி அமைய வேண்டும்!
இல்லையேல் மரண தண்டனை'!

இரவு எனும் இன்பத் தேன்
மண் தரையில் கொட்டுகிறது!
ஹரின் திலோத்தியின் மனதை
தேள்கள் வந்து கொட்டுகிறது!

விஞ்ஞானம் நிலாவைக் கல் என்கிறது!
கவிதைகள் நிலாவை பெண் என்கிறது!
இரண்டுமே சரிதான்!

நிலா ஒரு கல் தான்!
நிலா ஒரு பெண் தான்!
எப்படியெனில் பெண் ஒரு கல்தான்!

ஆனால், அந்தக் கல்தான்
யுகங்களை, அண்ட சராசரத்தை,
மானிடத்தை இந்த நொடிவரை
மலர வைத்துக் கொண்டிருக்கிறது.
அந்தக் கல் பல சிற்பிகளை
செதுக்கியிருக்கிறது!

மரண தண்டனை என்ற தீர்ப்பின்
அதிர்விலிருந்து மெல்ல வெளியேறிக்
கல்லானாள் திலோத்தி.

காதல் - ஹரினுக்கு சிறகு!
காதல் - ஷாஜகானுக்கு புதை மணல்!
சிறகடிப்பவனுக்கு – புதைந்து
கொண்டிருப்பவனின் மனோநிலை,
இமையத்தை விட இரண்டடிகள் அதிக
தூரத்திலிருக்கிறது என்பதை திலோத்தி
உணர்ந்தாள்!

'அரசர் அழகான ஓவியம் கேட்கவில்லை.
சோகமான அழகை கேட்கிறாரோ!'
திலோத்தி திறனாய்ந்தாள்.

அன்று முழுப் பௌர்ணமி இரவு!
அண்ணாந்து கிடந்தான் ஹரின்!

குயிலிறகை மயிலிறகால் நீவுவது மாதிரி
ஹரினின் விரல்களை நீவினாள் திலோத்தி!

'அன்பே, அரசர் எதைத்தான்
எதிர்பார்க்கிறார்?'
திலோத்தி உதடு மீட்டினாள்.

ஒரு மெழுகுவர்த்தி எரிந்து முடியும் நேரம்
கழித்து, எரிந்து விழத் தொடங்கினான்
ஹரின்!

'மும்தாஜை... மும்தாஜை
ஒரு பிரமாண்டமான கண்ணீர் துளியை
ஷாஜகானின் இதய வலியை
அவர் அழுத மொத்தக் கண்ணீரையும்
ஒரே சொட்டாக்கினால், அவர் விரும்பும்
ஓவியம் வரையலாம் திலோத்தி'
ஹரின் குமுறிக் குமைந்தான்!

சுத்தக் கலைஞன் ஒரு
சுய மரியாதைக்காரன்.
தான் நிராகிக்கப்படுகிறோம் என்று
அறிந்தால், அதை துடைத்துக்கொள்வதில்லை.
தனக்குள் தன்னைத் தானே
உடைத்துக் கொள்கிறான்.

மூன்றாம் பால் காய்ச்சும் இரவில்
நிலா ஒளிப் பால் ஊற்றிக் கொண்டிருந்தது!
திலோத்தி வெள்ளிக் கோப்பையில்
பசும்பால் ஊற்றிக்கொண்டிருந்தாள்.

'அரசர் கேட்பது கண்ணீர் சிந்தும் ரோஜா!
அன்பர் வரைவதோ, புன்னகைக்கும் ரோஜா!
அரசர் துயரத்தின் ஆழத்திற்கு இவரால்
இறங்க இயலவில்லையோ?'
திலோத்தி சிந்தித்துக் கொண்டே
மாம்பழம் நறுக்கினாள்.

அவள் கை தந்தம்!
விரல்கள் - தந்தத்தில் பூத்த
சூரிய காந்தி தண்டு!

கத்தி மாம்பழத்தை அறுத்துக் கொண்டிருந்தது!
கண்கள் ஹரினை உற்றுக்கொண்டிருந்தது!
மனம் மஹாலை எண்ணிக்கொண்டிருந்தது!
கத்தி மெல்ல அவள் விரலை,
மாம்பழத்தின் கனிந்த பகுதி என்று
எண்ணி அறுத்துவிட்டது.

'ஸ்.... ஆ....'

அடுத்த நொடி அவள் விரல்
ஹரினின் உதட்டுக்குள்...

திலோத்தி அவனையே நோக்கினாள்.
ஆச்சரியமாய் அதிசயமாய் அடங்காத
காதலுடன் தனக்காக துடிக்கும்
அவனையே நோக்கினாள்.

நகக் கண்களில் தீப்பொறிபட்டதைப் போல்
ஹரின் பதறினான்.
திலோத்தியின் மனதில் ஒரு பொறி
புறப்பட்டது!

ஆலமரம் போலிருந்த அரசன்
காளான் போல் குறுகியிருந்தான்!

அரசனுக்கு உடல் நோயில்லை. மன நோய்!
மன நோய்க்கு மருந்து தேவையில்லை. ஓவியம்!

'ஆலம்பனா!' ஷாஜகான் நிமிர்ந்தார்.
குயில் நின்றிருந்தது.
'யாரம்மா நீ?'
'நான் ஓவியர் ஹரினின் மனைவி
திலோத்தி!'
ஷாஜகான் விளிகளுக்குள் சிற்றொளி.
ஒரு மாசம் அவகாசம் தேவை ஆலம்பனா'
பேரரசர் புருவம் வளைத்தார்.
'எதற்கு?'
'மும்தாஜ் மஹால் மாதிரி ஓவியம் வரைய'
'இவ்வளவு நாள் அவகாசம் இருந்ததே!'
குயில் மௌனமானது.
சிங்கம் பேசியது.
'ஒரு மாத அவகாசம் தந்தோம்'

குயில் சிட்டுக் குருவியாய் மாறி
சிறகடித்துப் போனது.

காதல் - எதிலிருந்து? எதுவரை?
அணுவின் துவக்கத்திலிருந்து
அஸ்தியின் பிடிவரை!
ஹரினுக்கு அறிய வைத்தாள் திலோத்தி!

'பெண் என்ற பிஞ்சுப் பிரபஞ்சமே
கனவாக நீயிருந்தால்
கண் விழித்தா நான் இருப்பேன்?
நிலமாக நீயிருந்தால்
நடக்கமாட்டேன் தவழ்ந்திருப்பேன்,
முள்ளாக நீயிருந்தால்
குத்திக் கொண்டு குதூகலிப்பேன்,
தீயாக நீயிருந்தால்
தினந்தோறும் தீக்குளிப்பேன்,
தூசாக நீயிருந்தால்
கண் திறந்து காத்திருப்பேன்,
மழையாக நீயிருந்தால்
கரையும் வரை நனைந்து நிற்பேன்'.

ஓவியன் ஒரு மாதமும் காதலாய்
கசிந்து உல்லாசியானான்!

காதலின் உச்சிவரைக்கும்
இன்பத்தின் சிகரம் வரைக்கும்
தாம்பத்தியத்தின் எல்லை வரைக்கும்
ஹரினை அழைத்து சென்றாள் திலோத்தி.

ஓவியப் பலகையில் ஒட்டடைகள் மண்டின.
வர்ண குழம்புகள் கெட்டிபட்டு போயின.

ஒரு நாள் மாலை வீடு
திரும்பினான் ஹரின்.

'திலோத்தி... திலோத்தி' என
மெல்லிசையாய் அழைத்தான்.

ஓவியப் பலகை சுத்தம்
செய்யப்பட்டிருந்தது. வர்ணக் குழம்பும்
தயார் நிலையில்...

ஒரு கடிதம் ஊசலாடியது.

'அன்பே!
சோகத்தின் ஆழம் அந்த சோகத்தின்
ஆழத்திற்கு இறங்குபவரால் தான்
உணர முடியும்.
ஆலம்பனாவின் மனசு உனக்கு
வரவேண்டுமெனில், ஆலம்பனாவின்
நிலைக்கு நீ வரவேண்டும்.
என்னை யமுனைத் தாயிடம்
ஒப்படைத்து கொள்ளப் போகிறேன்.
என் மரணம்,
உனக்குள் ஆலம்பனாவின்
உணர்சிகளை நிரப்பும்;.
ஒரே ஒரு ஓவியம் வரை!
அது மும்தாஜ்மஹாலை உருவாக்கும்.
அழுது முடித்தபின் நமக்காக வரை!
இந் நேரம் இறந்து போயிருக்கும்
திலோத்தி'.

'திலோத்தி!' – திசைகளில் எதிரொலிக்க
கத்தினான் கதறினான் உடைந்தான்
தூளானான் தூசானான்
ஒன்றுமின்றிப் போனான்.

திலோத்தி அவனுக்கு கடலானான்
அவன் கப்பலானான்
மூழ்கத் தொடங்கினான்.
ஷாஜகானின் வலி ஹரினுக்குள்...
அவனால் ஒரு பிரமாண்டமான
கண்ணீர் துளியை
கற்பனை செய்ய முடிந்தது.

வர்ணங்களை ஒதுக்கினான்
கண்ணீரின் நிறத்திலேயே
அந்தக் கண்ணீரை வரைந்தான்.

'அற்புதமான ஓவியம்'
ஷாஜகானின் உதடுகள் ஆண்டுகளுக்கு பின்
சிறிது மலர்ந்தது,

'அவள் எங்கே?
அந்த ஓவியனின் மனைவி எங்கே?
அவள் ஏதோ செய்திருக்கிறாள்.
ஹரினை ஷாஜகானாய் மாற வைத்து
ஓவியம் செய்திருக்கிறாள்'

அமைச்சர் ஆசிப் நடந்ததை கூறினார்
அதிர்கிறார் அரசர்.

'என்னது அவள் யமுனையாற்றில் விழுந்து
தற்கொலை செய்து கொண்டாளா?
அந்த ஓவியன் ஹரின் எங்கே?'

'யமுனைத் தாய் ஹரினுக்கு மட்டும்
இடமளிக்க மறுத்துவிடுவாளா என்ன?'
என்கிறார் ஆசிப்.

உலகில் எல்லா நதிகளும்
சிரித்துக் கொண்டுதான் ஓடுகின்றன.
அழுது கொண்டு ஓடும் ஒரே நதி
யமுனை நதி தான்!


உடைந்த நிலாக்கள்
-பா.விஜய்-





மும்தாஜின் மரணத்திற்காய்
தாஜ்மஹால் ஜனனம்!
தாஜ்மஹாலின் ஜனனத்திற்காய்
திலோத்தியின் மரணம்!

-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்-