18 July 2012

நகர வாழ்க்கையின் எழுதாத பக்கங்கள்

               எத்தனையோ கனவுகளை நனவாக்கும் எண்ணங்களோடு, தன் உறவுகளைப் பிரிந்து நகரம் எனும் நரகத்திற்கு வந்து தனித்து வாழும் உள்ளங்களின் வலிகளை வார்த்தைகளாக்கி கொண்டு வருகிறது இப் பதிப்பு. ஏதேதோ எதிர்பார்ப்புக்களுடன் வேலை தேடியோ, உயர்கல்விக்காகவோ நகரத்தை நாடி வரும் இளைஞர் யுவதிகளின் புலம்பல் இது.


                   'என் மகன் கொழும்பில் படித்துக் கொண்டே வேலை பார்க்கிறான்' என்று ஊரில் பெற்றோர்கள் பெருமை அடித்துக்கொண்டு திரிகின்ற போதும் time table வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கும் மகனின் நிலமை கவலைக்கிடம் தான்! கொஞ்சம் திரும்பிப்படுத்தால் பக்கத்திலுள்ள சுவரில் முட்டிக் கொள்ளும் அளவிற்கு சிறியதாய் ஒரு room. அதிகாலையில் அன்பாய் எழுப்பும் அம்மாவின் குரலுக்கு பதிலாய் அலரித் தொலைக்கும் cell phone இல் set பண்ணி வைத்த அலாரம். எழுந்திருக்காமலே cell phone இல் face book log in செய்து friends இன் birthday list check பண்ணி wish பண்ணுவதில் தொடங்குகிறது நம் time table வாழ்க்கை. அவசரமாய் குளித்துவிட்டு அவசர அவசரமாய் நாமே tea போட்டு குடிக்க வேண்டிய நிலமை. என்ன இருந்தாலும் tea போடுவது பெண்களின் வேலை என்று வறட்டுக் கௌரவத்தில் ஒரு tea க்கு கூட சாப்பாட்டுக் கடையில் தங்கியிருக்கும் ஆண் நண்பர்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். ருசி இல்லாத போதும் பசிக்காய் புசிக்கும் restaurant சாப்பாடு தொண்டைக்குள் இறங்க ரொம்பவே அடம்பிடிக்கும்.

 

                Bus பிடிப்பதற்கு கால்கடுக்க நடக்கும் போது Discovery இலும் Scooty pep இலும் ஊரில் சுற்றித் திரிந்த நினைவுகள் வந்து வலிக்கத்தான் செய்கின்றன. Bus இல் ஏறி Head set ஐ காதில் கொழுவிக் கொண்டு பாடல்களை தட்டிவிட்டால் தான் பயணம் முழுமை பெறுவது போன்ற ஓர் உணர்வு. போகின்ற இடத்தில் தாய் மொழியை தவிர்த்துவிட்டு வேற்று மொழியில் பேச நிர்பந்திக்கப்படும் போதெல்லாம் நம் பேச்சு சுதந்திரமும் பறிக்கப்படுகிறது என்ற சிந்தனை வரத்தான் செய்கிறது.

                  எல்லாம் முடித்துக் கொண்டு மீண்டும் room க்குள் வந்து அடங்கிவிட இரவாகிப் போகிறது. ஓவ்வோர் நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வீட்டில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக் கூட நம் time table குள் சிக்கித் தவிக்கிறது. எப்போதும் வரும் வீட்டாரின் அழைப்பு, எப்போதாவது வரும் நட்புக்களின் அழைப்பு என்று தொலைபேசிக்குள்ளேயே நம் சொந்தங்களை அடக்கிவிடுகிறோம். தூங்கி எழுந்துவிட்டால் மறுநாள் மீண்டும் அதே வாழ்க்கை, அதே ஓட்டம்.




                          Kik இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் kik ஏற்றுவதற்காய் சில exams அடிக்கடி எட்டிப் பார்க்கும். இங்கே படிக்கும் நாட்களை விட பரீட்சை நாட்கள் அதிகம், படுத்து உறங்கிய நேரங்களைவிட படித்துக் கொண்டே உறங்கிய நேரங்கள் அதிகம். Exams நெருங்கும் வரை புத்தகங்களை disturb பண்ண விரும்புவதில்லை. Exam வந்ததும் study leave எடுப்பதற்காய் university இலும் work இலும் எடுத்து விடும் பொய்கள் நம் கற்பனை திறனின் அத்திவாரம். Study leave என்ற பெயரில் வீட்டில் நின்றாலும் நிம்மதியாய் படித்துக்கொள்ள முடிவதில்லை. மூன்று வேளை சாப்பாடு எடுப்பதற்காய் வெளியில் சென்று வருவதிலேயே நேரம் சரியாகிப் போகிறது. அக்கறையுடன் சமைத்துக்கொடுக்க அருகில் அம்மா இருப்பதில்லையே! இதற்காகவே மூன்று வேளையை இரண்டாகவோ, ஒன்றாகவோ சுருக்கிக் கொண்டு notes ஐ சப்பித் தொலைக்கும் நட்புக்களும் உள்ளன.





                         ஊருக்குப் போவதற்காய் போயாவும் strike ம் தேடி அலைந்து குறைந்தது மூன்று நாள் விடுமுறை கிடைத்துவிட்டால் வருகின்ற சந்தோசமே தனி! இரவு bus ஐ பிடித்துவிட்டால் மறுநாள் சூரியோதயம் ஊரில் தான். அங்கும் நம் ஓட்டம் அடங்குவதில்லை. 'இங்க வந்தும் வீட்டில் ஆறுதலாய் நிற்கவில்லை' என கோபித்துக்கொள்ளும் குடும்பத்தினர், 'வந்ததற்கு ஒருமுறை தானே நம்மை சந்திக்க வந்தாய்' என குறைபட்டுக்கொள்ளும் நட்புக்கள் என அன்புத் தொல்லைக்குள் மாட்டித் தவிக்கிறது நம் விடுமுறை நாட்கள். எல்லாவற்றிற்கும் மேலாக பணப் பிரச்சனை. அது வேண்டும், இது வேண்டும் என வீட்டில் அப்பாவிடம் list கொடுத்து சட்டம் போட்டுக் கொண்டிருந்து விட்டு, இங்கே வந்து budget இல் வாழ்க்கை நடத்த வேண்டிய நிலமை. ஆனாலும் இன்றாவது நம்மில் பலருக்கு பெற்றோரின் கஷ்டம் புரிந்தது வரவேற்கத்தக்கதே.

                       இத்தனை கஷ்டங்களையும் எதற்காக புலம்புகிறேன் என்று சிந்திக்கிறீர்களா? இத்தனை வலிகளையும் உணர்ந்து தாம் நகரிற்கு வந்த நோக்கத்தை அடைவதற்காய் வாழும் நட்புக்கள் எத்தனை உள்ளன? பல கஷ்டங்கள் பட்டு பெற்றோர் அனுப்பி வைக்கும் பணத்தை party என்ற பெயரில் குவாட்டர் சொல்லி வீணடிக்கும் ஆண்களும், style என்ற பெயரில் beauty centers இல் இறைக்கும் பெண்களும் இவற்றை உணர மறந்துவிட்டனரோ? நம் நல் எதிர்காலத்தை எதிர்பார்த்து பெற்றோர்கள் காத்திருப்பார்கள் என்பது நினைவில் இருப்பதில்லையோ? ஏற்றுக்கொண்ட வாழ்க்கை கசப்பாய் இருந்தாலும் அதற்கான காரணம் புரிந்துவிட்டால் கஷ்டங்கள் மறைந்துவிடும். நாம் இத்தனை வலிகளையும் சுமக்கின்றோம், நம் வாழ்க்கை வழி தவறிப் போவதற்காய் அல்ல என்று அனைத்து நட்புக்களும் புரிந்து கொண்டால் நாளைய நாட்கள் நம் கையில்....!

காதலித்து இவ் வாழ்க்கையை
கட்டிக் கொள்ளவில்லை!
கட்டிக் கொண்டதால்தான் இன்னும்
காதலித்துக் கொண்டிருக்கிறோம் - நம்
கனவுகளை நனவாக்குவதற்காய்......!!



-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்-

11 July 2012

கனவுகள் கலைந்தன

கனவுகள்! இவை எம் இனத்தின்
கலையாத நினைவுகள்!
கனவுகள் கண்டு கண்டே
கனத்துப் போயின எம் கண்கள்!

பால் பருகும் குழந்தை முதல்
பல் விழுந்த பாட்டி வரை
பகலிரவாய் கனவுகள்
ஆனால் பலிக்காத கனவுகள்!

விளையாட்டு விமானம் வாங்கி வர
வீதி வரை சென்ற தந்தை
விமான குண்டுகளால் வீழ்ந்த போது
வீணாகிப் போயின பாலகனின் கனவுகள்!

பள்ளிப் பருவமதில்
பாடசாலை சென்ற போது
பணக்காரர்களின் பகிடிவதைகளில்
பாழாகிப் போயின ஏழையவன் கனவுகள்!

கல்லூரிப் பயணமதின் கடைசிப் பாதையிலே
கலைந்து போகையிலே
தொலைந்து போயின – எம்
கறையில்லா நட்பின் கனவுகள்!

வேலையற்ற பட்டதாரியாய்
வேலை தேடி அலைந்த போது
காசு வலை வீசி காக்கா பிடிக்கும்
காரியதாரிகளிடம் கலைந்து போனது
கல்வி கற்றவனின் தொழிற் கனவுகள்!

உயிருக்குயிராய் காதலித்த- உன்
உண்மைக் காதலன் தன் மனைவியை
உன்னிடம் அறிமுகப்படுத்திய போது
உடைந்து போயின உன் வாழ்க்கை கனவுகள்!

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து,
ஆசி கூறி செய்து வைத்த கல்யாணம்
விவாகரத்து கோரி நிற்கையிலே
வீணாகிப் போயின அந்த வீட்டின் கனவுகள்!

முதிர்வுக் காலமதை – தன்
மூத்த பிள்ளையுடன் கழிக்க விரும்பிய
மூதாட்டியின் முக்கிய கனவுகள்
முதியோர் இல்லத்தில் மூழ்கிப் போயின!

சமாதானத்தை எதிர்பார்த்து
சதா ஏங்கித் தவித்த போது
யுத்தத்தில் கலைந்தன
தமிழனின் அமைதிக் கனவுகள்!

எங்கும் கனவுகள்
எப்போதும் கனவுகள்- ஆனால்
எதிர்பாராத விதமாய் எம்மை
ஏமாற்றும் கனவுகள்!

சகோதரா! சோர்ந்து விடாதே!
சத்தம் இல்லாமல் இருக்கும் உன் கனவுகள்
சந்தர்ப்பம் வரும் போது- உன் பெயரை
சத்தமாக உச்சரிக்க வைக்கும்.

அப்துல் கலாமின் அழியாத கனவுகள்
அவரை விஞ்ஞானி ஆக்கியது போல்
எம் கனவுகள் எம்மையும்
எட்டாத உயரத்தில் வைக்கும்.

கனவுகள் கலைந்து போனாலும்- நீ
கனவு காண்பதை கலைக்காதே!
கலைந்து போன கனவுகள் யாவும்
காலமது வரும் போது எம்மை
வாழவைக்கும் என்று ஒரேயொரு கனவுகாண்
வலிகள் யாவும் வசந்தமாய் தோன்றும்!!!



இக் கவிதையை ஏற்கனவே 'காற்றலையின் கவிதைகள்' என்ற கவி தொகுப்பில் பிரசுரித்த போதும் மீண்டும் ஒருமுறை இங்கே பதிவிடுகிறேன்.



-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்.....!-


8 July 2012

முதன் முதலாய் அம்மாவுக்காய்....!

                         நினைவு தெரிந்த நாள்முதல் நம் முதல் தெய்வம் அன்னையவள். உயிர் கொடுத்து, உயிருக்கு இந்த உடல் கொடுத்து, என் உணர்வுகளுக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கும் அன்னைக்காய் ஓர் பதிப்பு. கவிதை என்ற பெயரில் ஏற்கனவே ஏதேதோ கிறுக்கிய போதும் அதில் அன்னைக்கு முதல் இடம் குடுக்கவில்லையே என்ற நெடுநாள் காயத்திற்கு மருந்திடும் வகையில் வலைப்பதிப்பில் முதல் பதிப்பாய் 'முதன் முதலாய் அம்மாவுக்காய்.....!'


                    ஆணோ, பெண்ணோ, நல்லவனோ, கெட்டவனோ என்ற எம் ஜாதகம் ஏதும் தெரியாத போதும் குறைவில்லா அக்கறையுடன் கருவறையில் சுமந்தவள் நம் தாய். எதிர்பார்ப்பு எதுவும் இன்றி எம் நல் எதிர்காலத்துக்காய் தன்னை உருக்கி எம் வாழ்வுக்கு ஒளியூட்டிக் கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியாய் என்றென்றும் அவள்.

                நோயுற்ற நாட்களின் இரவுப் பொழுதுகளில் மணிக்கொருமுறை எழுந்து நெற்றியை தொட்டுப் பார்க்கும் தாயின் அன்பில் ஓடிப் போகிறது எந்தவொரு நோயும்...! தமக்குப் பிடித்ததே எமக்கும் பிடிக்க வேண்டுமென்று விருப்பு வெறுப்புக்களைக் கூட திணிக்கும் உறவுகளுக்கிடையில், எங்கள் சந்தோசத்துக்காய் தன் விருப்பு வெறுப்புக்களை தியாகம் செய்யும் தாயின் அன்பில் கடவுள் கூட தோற்றுப் போகிறான். தன்னால் செய்யமுடியாத சிலவற்றை நிறைவேற்றுவதற்காய் கடவுளால் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்ட உறவு தான் தாயோ என பலமுறை வியந்திருக்கிறேன்.

                சுமக்க முடியாமல் சுமக்கும் பரீட்சையின் சுமைகள், இதயத்தை இரண்டாக கிழித்துக்கொண்டிருக்கும் மறக்க முடியாத நினைவுகள், வலி கொடுக்கும் தோல்விகள் இவை எல்லாவற்றையும் துரத்திவிட்டு நிம்மதி தரும் அழகிய இருப்பிடமாய் தாயின் மடி. அன்னையவள் மடியில் தலைசாய்த்து படுத்துவிட்டால் நிம்மதியை எனக்கென வாங்கி விட்டதாய் ஓர் உணர்வு. சொல்ல முடியாத சோகங்கள் சுமைகளாய் தோன்ற காரணம் சொல்லாமல் அவள் மடியில் அழுது தொலைத்துவிட்ட தருணங்களில், காரணம் கேட்டு வதைக்காமல் என் தலைகோதி மனம் நோகாமல் ஆறுதல் சொல்லுகையில் எதற்கும் ஒப்பிட முடியாத உன்னத உறவாய் அவள். நம் வெற்றி கண்டு பூரித்துப் போய் நிற்கும் தாயின் முகம் தரிசித்த பின்பு தான் புரிகிறது அந்த வெற்றியின் உண்மையான அர்த்தம். 



          உணர்வுகளை பகிர்ந்து கொள்கையில் தோழியாயும், தந்தையால் மறுக்கப்பட்ட நம் வேண்டுகோளுக்கு சம்மதம் பெற வாதாடுகையில் நல்லதொரு சமாதான தூதுவராயும் நமக்கு ஏற்றவளாய் மாறுகின்ற போதும் அதிகாலை வேளையில் தட்டி தட்டி தூக்கத்தை கலைக்கும் போது நம்மிடம் திட்டு வாங்கத்தான் செய்கிறாள். யார் யாரோ மீது வெளிக்காட்ட முடியாத கோபங்களையெல்லாம் அம்மாவின் மேல் காட்டும் போதுகோபித்துக் கொள்ளாமல் 'இன்று யார் கணக்கு என் மேல் விழுகிறது?' என்று கேட்கும் தாயின் புரிந்துகொள்ளல் தன்மையை பார்த்தவுடன் எந்தன் கோபங்கள் கூட என் மேல் கோபித்துக் கொள்கிறது. எனக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு ஜீவனுக்கும் முக்கிய தெய்வம் தாயாகிறாள். ஒவ்வொரு தாய்க்கும் முக்கிய உறவு தன் குழந்தையாகிறது.

'எனக்கொன்று ஆனதென்றால்
 உனக்கு வேறு பிள்ளையுண்டு
உனக்கேதும் ஆனதென்றால்
 எனக்கு வேறு தாய் இருக்கா?'
                               என்ற வைரமுத்துவின் கவி வரிகள் வெறும் வார்தைகள் மட்டுமல்ல. இவை கண்ணில் நீரை பொங்க வைத்த நிஜ வரிகள். தாயின் அன்பு வார்த்தைக்குள் அடக்க முடியாதது. அவள் அன்புக்குள் இந்த உலகமே அடங்கிவிடுகிறது. அந்த அன்புக்கு அடிமைப்பட்ட ஒரு ஜீவனாய் நானும் இங்கே....!





-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்.......!-