11 December 2012

ஆண்களை விற்கும் தமிழ் சமூம்!!!


                             ஆண்களை விற்கிறார்களா? எங்கே? என்று ஆவேசமாக கேட்பது புரிகிறது. ஆம்! சீதனம் என்ற பெயரில் திருமண சந்தையில் ஆண்கள் தினமும் விலைபோய் கொண்டிருக்கிறார்கள். மற்றைய சமூகங்களில் இல்லாதவாறு தமிழ் சமூகத்தில் அதுவும் அதிகமாக யாழ்ப்பாண கலாசாரத்தில் இவ் வியாபாரம் பிரசித்தமாகிவிட்டது கொடுமையான விடயம் தான்!



                    சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் இன்று ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. பெண்ணுடைய குணம், கல்வி என்பவற்றை விட எவ்வளவு சீதனம் என்பதிலேயே ஆண்வீட்டார் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். யாழ்ப்பாண கலாசாரத்தில் சீதனம் இன்றி ஒரு திருமணத்தை இப்போது கண்டுகொள்ள முடிவதில்லை. வெளிநாட்டு திருமணங்கள் கூட இப்போது அதற்கு விதிவிலக்கு இல்லை. காதல் திருமணங்களும் கடைசியில் சீதனத்திற்கு கட்டுப்பட்டுவிடுவது கவலைக்குரியதே!

                               முன்பெல்லாம் எம் மகளுக்கு தானே கொடுக்கிறோம் என்ற ஒரு திருப்தியுடன் தம்மால் இயன்றதை பெண்வீட்டார் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. மாப்பிள்ளையின் தங்கைக்கு இவ்வளவு, பெற்றேர்ருக்கு இவ்வளவு என்று கணக்கு போட்டு பறித்துவிடுகிறார்கள். கஷ்டப்படடு உழைத்து. கடன் வாங்கி தன் பிள்ளைக்கு இல்லாமல் இன்னொருவர் பிள்ளைக்கும், வேறொரு குடும்பத்திற்கும் தம் பணத்தை கொடுக்கும் போது பெண் வீட்டாரின் மனநிலையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

                         தரத்திற்கு ஏற்ப பொருளின் விலை வேறுபடுவதை போன்றே இங்கேயும் பல விலைகள். படிப்பு, வேலை என்பவற்றை வைத்து தீர்மானிக்கிறார்களாம்! அண்மையில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது எதேட்சையாக சீதன பேச்சு வந்துவிட்டது. 'நீங்கள் எவ்வளவு சீதனம் வாங்கலாம் என்று இருக்கிறீர்கள்?' என்று கேட்டேன். உடனே தன் மேற்படிப்புக்கு செலவான பணத்தை கணக்கு போட ஆரம்பித்துவிட்டார். இவ்வளவாவது பரவாயில்லை, 'எனக்கு டீ கூட போட தெரியும், அதற்கும் சேர்த்து தான் சீதனம் வாங்க வேண்டும்' என்று சொல்லிவிட்டார். (அப்ப பாருங்களேன்!!)

                        தனது கல்வி, வேலை என்பவற்றிற்கேற்ப சீதனத்தை ஏற்றிக் கொண்டு போகும் ஆண்கள், பெண்களின் கல்வி, வேலையை கருத்தில் கொண்டு அதை குறைத்து விடுவதில்லையே. திருமணம் செய்த நாளிலிருந்து பெண் அந்த குடும்பத்திற்காக தானே உழைக்க போகிறாள்? உதாரணமாக ரூ25000 சராசரியாக உழைக்கும ஒரு பெண் 25 வயதில் திருமணம் செய்கிறாள் என வைத்துக் கொண்டால் குறைந்தது 30 வருடங்கள் வேலைக்கு சென்று ரூ9,000,000 (25000*12*30) அந்த குடும்பத்துக்காக கொடுக்க போகிறாள். இதெல்லாம் எந்தக் கணக்கில் போய் சேரப்போகிறது? ஏறக்குறைய ஆணுக்கு நிகராக உழைக்கும் பெண், ஆணுக்கு சீதனம் கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நியாயமற்றது. 





                     எத்தனையோ திருமணங்கள் சீதனப் பிரச்சனையினால் நின்று போயிருக்கின்றன. இங்கே மற்றொரு உண்மை என்னவெனில் மாப்பிள்ளையின் தாய்மார் தான் இதில் மும்முரமாக இறங்குகின்றனர். ஏனோ தெரியவில்லை தந்தைமார் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஒருவேளை தான் சீதனம் வாங்கியதால் மனைவியிடம் வாழ்க்கை முழுவதும் திட்டு வாங்கிய அனுபவத்தினாலாக இருக்க கூடும்.

                    சீதனம் என்ற பெயரில் இன்னமும் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள் என்று கவலைப்படுவதா இல்லை ஆண்களை வாங்கும் அளவுக்கு பெண்கள் வளர்ந்து விட்டார்கள் என்று சந்தோசப்படுவதா என்பது புரியவில்லை!

இங்கே நடப்பது என்னமோ பகல் கொள்ளை தான். ஆனால் இரு தரப்பும் வாங்குவதையும் கொடுப்பதையும் ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை. நல்ல கொள்கைகளுடனான ஆண்கள் தோன்றும் வரை இந்த பகல் கொள்ளைகள் தொடரும்......!!!



-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்-

No comments:

Post a Comment

என் கிறுக்கல்ளுக்கான உங்கள் கருத்துக்களை பகிருங்கள்