8 July 2012

முதன் முதலாய் அம்மாவுக்காய்....!

                         நினைவு தெரிந்த நாள்முதல் நம் முதல் தெய்வம் அன்னையவள். உயிர் கொடுத்து, உயிருக்கு இந்த உடல் கொடுத்து, என் உணர்வுகளுக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கும் அன்னைக்காய் ஓர் பதிப்பு. கவிதை என்ற பெயரில் ஏற்கனவே ஏதேதோ கிறுக்கிய போதும் அதில் அன்னைக்கு முதல் இடம் குடுக்கவில்லையே என்ற நெடுநாள் காயத்திற்கு மருந்திடும் வகையில் வலைப்பதிப்பில் முதல் பதிப்பாய் 'முதன் முதலாய் அம்மாவுக்காய்.....!'


                    ஆணோ, பெண்ணோ, நல்லவனோ, கெட்டவனோ என்ற எம் ஜாதகம் ஏதும் தெரியாத போதும் குறைவில்லா அக்கறையுடன் கருவறையில் சுமந்தவள் நம் தாய். எதிர்பார்ப்பு எதுவும் இன்றி எம் நல் எதிர்காலத்துக்காய் தன்னை உருக்கி எம் வாழ்வுக்கு ஒளியூட்டிக் கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியாய் என்றென்றும் அவள்.

                நோயுற்ற நாட்களின் இரவுப் பொழுதுகளில் மணிக்கொருமுறை எழுந்து நெற்றியை தொட்டுப் பார்க்கும் தாயின் அன்பில் ஓடிப் போகிறது எந்தவொரு நோயும்...! தமக்குப் பிடித்ததே எமக்கும் பிடிக்க வேண்டுமென்று விருப்பு வெறுப்புக்களைக் கூட திணிக்கும் உறவுகளுக்கிடையில், எங்கள் சந்தோசத்துக்காய் தன் விருப்பு வெறுப்புக்களை தியாகம் செய்யும் தாயின் அன்பில் கடவுள் கூட தோற்றுப் போகிறான். தன்னால் செய்யமுடியாத சிலவற்றை நிறைவேற்றுவதற்காய் கடவுளால் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்ட உறவு தான் தாயோ என பலமுறை வியந்திருக்கிறேன்.

                சுமக்க முடியாமல் சுமக்கும் பரீட்சையின் சுமைகள், இதயத்தை இரண்டாக கிழித்துக்கொண்டிருக்கும் மறக்க முடியாத நினைவுகள், வலி கொடுக்கும் தோல்விகள் இவை எல்லாவற்றையும் துரத்திவிட்டு நிம்மதி தரும் அழகிய இருப்பிடமாய் தாயின் மடி. அன்னையவள் மடியில் தலைசாய்த்து படுத்துவிட்டால் நிம்மதியை எனக்கென வாங்கி விட்டதாய் ஓர் உணர்வு. சொல்ல முடியாத சோகங்கள் சுமைகளாய் தோன்ற காரணம் சொல்லாமல் அவள் மடியில் அழுது தொலைத்துவிட்ட தருணங்களில், காரணம் கேட்டு வதைக்காமல் என் தலைகோதி மனம் நோகாமல் ஆறுதல் சொல்லுகையில் எதற்கும் ஒப்பிட முடியாத உன்னத உறவாய் அவள். நம் வெற்றி கண்டு பூரித்துப் போய் நிற்கும் தாயின் முகம் தரிசித்த பின்பு தான் புரிகிறது அந்த வெற்றியின் உண்மையான அர்த்தம். 



          உணர்வுகளை பகிர்ந்து கொள்கையில் தோழியாயும், தந்தையால் மறுக்கப்பட்ட நம் வேண்டுகோளுக்கு சம்மதம் பெற வாதாடுகையில் நல்லதொரு சமாதான தூதுவராயும் நமக்கு ஏற்றவளாய் மாறுகின்ற போதும் அதிகாலை வேளையில் தட்டி தட்டி தூக்கத்தை கலைக்கும் போது நம்மிடம் திட்டு வாங்கத்தான் செய்கிறாள். யார் யாரோ மீது வெளிக்காட்ட முடியாத கோபங்களையெல்லாம் அம்மாவின் மேல் காட்டும் போதுகோபித்துக் கொள்ளாமல் 'இன்று யார் கணக்கு என் மேல் விழுகிறது?' என்று கேட்கும் தாயின் புரிந்துகொள்ளல் தன்மையை பார்த்தவுடன் எந்தன் கோபங்கள் கூட என் மேல் கோபித்துக் கொள்கிறது. எனக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு ஜீவனுக்கும் முக்கிய தெய்வம் தாயாகிறாள். ஒவ்வொரு தாய்க்கும் முக்கிய உறவு தன் குழந்தையாகிறது.

'எனக்கொன்று ஆனதென்றால்
 உனக்கு வேறு பிள்ளையுண்டு
உனக்கேதும் ஆனதென்றால்
 எனக்கு வேறு தாய் இருக்கா?'
                               என்ற வைரமுத்துவின் கவி வரிகள் வெறும் வார்தைகள் மட்டுமல்ல. இவை கண்ணில் நீரை பொங்க வைத்த நிஜ வரிகள். தாயின் அன்பு வார்த்தைக்குள் அடக்க முடியாதது. அவள் அன்புக்குள் இந்த உலகமே அடங்கிவிடுகிறது. அந்த அன்புக்கு அடிமைப்பட்ட ஒரு ஜீவனாய் நானும் இங்கே....!





-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்.......!-


  



No comments:

Post a Comment

என் கிறுக்கல்ளுக்கான உங்கள் கருத்துக்களை பகிருங்கள்