முதன் முதலாய் அவள்
முகம் பார்த்தது
நினைவில் இல்லை – ஆனால்
அவள் கண்கள் என்னை
அளந்து கொண்டிருந்ததை நான்
கண்டுவிட்ட அந்த கணங்கள்
இன்னும் மனதில் இருக்கிறது.
யாரோ என்று அறியாதபோதும்
ஏதோ ஒரு உணர்வை
நெஞ்சில் நெருட வைத்தன
அவள் பார்வைகள்.....!!!
அடிக்கடி சந்தித்துக் கொண்டபோதும்
அந்த நிமிடங்களிலெல்லாம்
இமைகளை படபடக்க விட்டு
உதடுகளை ஊமையாக்கிக் கொண்டோம்.
காலம் கை தந்தது....
சந்தர்ப்பம் சந்திக்க வைத்தது
ஒருவாறு பேசி, பழகி
உடன்படிக்கை உருவாக்கி கொண்டோம்!!
உடன்படிக்கை??????
ஆம்.....
நட்புக்கான உடன்படிக்கை!
சந்தோசங்களை சரிபங்கிடவும்,
தோல்விகளில் தோள் சாயவும்
தோழி என்ற ஒப்பந்தம்!!!
வீட்டின் சண்டைகள் முதல்
விண்வெளியின் சந்தேகங்கள் வரை
விலாவாரியாக பேசிக்கொண்டோம்.
ஆனாலும்......,
நட்பென்ற போர்வைக்குள்
காதலை அவள் மறைத்துக்கொண்டதை
என் உள்ளம் உணராமல் இல்லை.
காதல் சாதலின் ஆரம்பம் என்ற
கொள்கையுடைய என் வாழ்விலும்
ஒரு காரிகை...!!!
மூளைக்கும் மனதிற்கும் இடையில்
ஒரு போராட்டம்....!
கொள்கைக்கும் உணர்வுக்கும் இடையில்
ஒரு தடுமாற்றம்...!
வாழ்க்கைக்கு வட்டம் போட்டு
வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்!!
பூமிப் பந்தின் விளிம்பில் நின்று
புதுமைப் படைப்பை ரசிக்க துடிப்பவள் அவள்!!
கொள்கைகளும் தத்துவங்களும்
பேசிக் கொண்டிருந்தேன் நான்!!
கனவுகளிலும் கற்பனைகளிலும்
மிதந்து கொண்டிருந்தாள் அவள்!!
காதல் என் கல்விக்கு கல்லறை
கட்டிவிடும் என்று - மனதிற்கு
காவல் போட்டிருந்தேன் நான்!!
காதலை யாரும் குறை கூறிவிடக் கூடாதென்று
கஷ்டப்பட்டு கல்வியில்
முதலிடம் பெற்றுக்கொண்டாள் அவள்!!
எனக்கும் அவளுக்கும்....
எத்தனையோ வேறுபாடு - காதல்
எட்டாப் பொருத்தம் என்றேன்,
விலகிவிடச் சொன்னேன்,
மறந்துவிட மன்றாடினேன்.
அரும்பில் கிள்ளிவிடு - இல்லையேல்
விபரீதம் ஆகிவிடும் என்றேன்,
விருட்சமாகிவிட்டது என்று சொல்லி
கை விரித்தாள்!!
மறுநாள் ஒரு பரிசுப்பொதியுடன்
முன் வந்து கை நீட்டினாள்!
பிரித்துப் பார்த்தேன்
அழகிய பேனா...!!
'பேனா' உறவுகளை பிரித்துவிடும் என்று
காதலிலும் நட்பிலும்
கருத்து நிலவுவது தெரியாதோ என்ற
சந்தேகப் பார்வையை வீசினேன்.
அது உண்மையானால்....
அப்படியாவது உன்னை
பிரிந்துவிடுகிறேன் என்று
கண்ணில் நீருடன்
காரணம் சொல்லிப் போய்விட்டாள்!!
உள்ளம் கனத்தது – எந்தன்
கண்ணிலும் நீர் கசிந்தது
ஆனால் உதடுகள் மட்டும்
காதலை சொல்ல மறுத்து
பிடிவாதம் பிடித்தது!!
உணர்வுகளை அடக்கிக் கொண்டு
உதட்டை பூட்டிக் கொண்டேன்!!
உள்ளம் தன்பாட்டில் அழுது கொண்டது!!
நெடுநாள் கழித்து....
கடல் கடந்து போகின்றேன்
கடைசியாய் சந்திக்க வேண்டுமென்று
தகவல் அனுப்பியிருந்தாள்.
மறைத்து வைத்த என் காதலை
மனது உடைத்துவிடும் என்ற அச்சத்தில்
வேண்டுகோளை மறுத்துவிட்டேன்!!
அவள் கொடுத்த பேனா
நம் பிரிவை நிச்சயமாக்கி விட்டு
நிரந்தரமாய் என்னுடன்
நிலைத்துவிட்டது!!
கண்மூடி திறப்பதற்குள்
காலம் காற்றாய் பறந்தது...
ஏதேதோ மாற்றங்கள் என் வாழ்விலும்
அரங்கேறியது!!
ஆறு ஆண்டுகள் கழிந்தது!!
அன்று ஏதோ ஓர் யோசனையில்
அந்த Shopping complex இன்
ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்தேன்!!
மனதில் ஏதோ தோன்ற
மறுபுறம் திரும்பி பார்க்கையில்
அதே விழிக்கும் கண்களுடன்
அங்கே நின்றிருந்தாள் அவள்!!!
நெற்றியில் இட்ட கறுப்பு பொட்டு
அவள் இன்னமும் யாருக்காகவோ
காத்துக்கொண்டிருக்கிறாள் என்று
காட்டிக் கொண்டது.
அவள் கண்களில் தெரிந்த தாகம்
அந்த காத்திருப்பு எனக்காகத்தான் என
உறுதிப்படுத்திக் கொண்டது!!!
என் நிலையை அறிந்துவிட
அவள் கண்கள் - என் கையில்
மோதிரத்தை தேடியதை
நான் காணாமல் இல்லை!!
அவளுக்கு கஷ்டம் வைத்து விடாமல்
தூரத்தில் இருந்து ஓடி வந்து – என்
காலைக் கட்டிக்கொண்டு
'அப்பா' என்றழைத்தது என் குழந்தை!!!!
அந்த ஓர் வார்த்தையில்
அவள் உடைந்து போய்விட்டாள்...
நான் குறுகிப் போய்விட்டேன்!!!
ஓர் வார்த்தை பேசவில்லை
ஓர் புரியாத பார்வை வீசிப்போனாள்
என்னால மறித்து பேச முடியவில்லை
ஏனெனில்...... அங்கே
என் மனைவி வந்து கொண்டிருந்தாள்.
போனவள் என்னவானாள் என்று
போதிய தகவல் கிடைக்கவில்லை...
தெரிந்துகொண்டு என்ன செய்வதென்றும்
எனக்குப் புரியவில்லை....!!
காதலிப்பதாய் சொல்லவில்லை
காத்திருப்பதாய் சொல்லவும் இல்லை – ஆனால்
காயப்படுத்திவிட்டேன் என்று - என்
கல் நெஞ்சம் கலங்கியது.
அவள் காதலில் தப்பில்லை – நான்
அதை ஏற்க தவறியதும் தப்பில்லை....
நம்மை சந்திக்க வைத்த
கடவுள் செய்ததே தப்பு.......!
அவளது உண்மைக் காதலை
கல் நெஞ்சு கொண்ட என்மீது
காட்டவைத்த இரக்கமற்ற
கடவுள் செய்ததே தப்பு.......!
காதல் கொண்ட இதயங்களை
காயப்படுத்திய களிப்புடன்
கடவுள்....!!!
அழுவதற்கு கூட
அனுமதி பறிக்கப்பட்டவனாய்
நான்....!!!
இருவரது இதயத்திலும்
இன்னமும் வாழ்கின்றேன் என்ற
இன்பத்தில் நம் காதல்!!!
இல்லை... இல்லை
அவள் காதல்....!!!!
-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்....!-
கவிதை!
ReplyDeleteகவிதை என்று சொல்ல முடியுமோ தெரியவில்லை. கிறுக்கல் மட்டுமே!
Delete
ReplyDeleteஅழுவதற்கு கூட
அனுமதி பறிக்கப்பட்டவனாய்
நான்....!!!
Superb...
Loved it
ReplyDelete