14 August 2012

ஹிப்னாடிஸம்(Hypnotism) : ஓர் பார்வை


                      ஹிப்னாடிஸம் என்பது என்ன? ஒரு மருத்துவ முறையா, இல்லை போர்க் கலையா? இதனை பயன்படுத்தி நமது பார்வையின் மூலம் மற்றவர்களை கட்டுப்படுத்தலாம் என்கிறார்களே அது சாத்தியமாகுமா? தமிழில் நோக்கு வர்மம் என்பதும் ஹிப்னாடிஸமும் ஒன்று தானா? இத்தகைய சந்தேகங்கள் நம்மில் பலருக்கு இருக்க கூடும். இவை பற்றி விரிவாக பார்ப்பதற்கு முதல் ஹிப்னாடிஸம் உருவான வரலாறை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.



ஹிப்னாடிஸத்தின் வரலாறு

                       மெஸ்மரிஸம் என்ற கலையின் வளர்ச்சியே ஹிப்னாடிஸமாக கருதப்படுகிறது. கி.பி 1700ம் ஆண்டுகளில் மெஸ்மர் என்பவர் நியூட்டனின் புவியீர்ப்பு விசையை அடிப்படையாக கொண்டு மனிதர்களில் ஓர் ஆய்வு நடத்தினார். அதாவது, திணிவுள்ள பொருட்கள் மீது புவியின் ஈர்ப்புசக்தி செல்வாக்கு செலுத்துவது போல், மனிதன் மனம் மீது எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறான் என்பது தொடர்பான ஆராய்ச்சி அது. அவ் ஆராய்ச்சியின் முடிவில் மனிதனை சுற்றி காந்தப்புலம் இருப்பதாக கண்டறிந்து, காந்த சக்தியின் உதவியுடன் பல நோயாளிகளையும் குணப்படுத்தி வந்தார். இவ் சிகிச்சை முறை அவரின் பெயராலேயே மெஸ்மரிஸம் என அழைக்கப்பட்டது. ஆனால் இவ் சிகிச்சை முறை எவ்வாறு சாத்தியமாகின்றது என்பதை மெஸ்மரால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. 1843ம் ஆண்டில் ஜேம்ஸ் பிராயிட் என்பவர் மெஸ்மரிஸம் தொடர்பாக மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சியில் உருவானதே ஹிப்னாடிஸம்.


ஹிப்னாடிஸம் என்பது......

                      இது ஒருவருடைய மனதை இன்னொருவர் தனது ஜீவ சக்தியின் மூலம் கட்டுப்படுத்தி, அவருடைய மனதில் தன் கட்டளைகளை பதியச் செய்யக் கூடிய ஒரு கலை. ஹிப்னாடிஸம் செய்யப்பட்டவர் ஹிப்னாடிஸம் செய்யும் போது வழங்கிய கட்டளைகளை அதன் பின்னர் அவ்வாறே நிறைவேற்றுவார். ஆனால் ஹிப்னாடிஸத்தின் போது அவ்வாறான கட்டளைகள் தனக்கு வழங்கப்பட்டதையோ, அத்தகைய ஒரு நிகழ்ச்சி நடந்ததையோ அவர் அறிந்திருக்கமாட்டார். இங்கு முக்கியமான ஒரு விடயம் ஒருவரின் அனுமதி இன்றி அவரை ஹிப்னாடிஸம் செய்துவிட முடியாது என்பதாகும்.


இது எவ்வாறு சாத்தியமாகின்றது?

                       இங்கே தான் மனிதனுடைய மனம் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகின்றது. மனிதனின் மனம் வெளி மனம்( Conscious mind), உள் மனம்(Sub-conscious mind) என இரண்டாக நோக்கப்படுகிறது. நமது உடலுக்குள் மனம் எங்கே உள்ளது என்பதையே அறிந்து கொள்ள முடியாத எமக்கு இதனை புரிந்து கொள்வது சிறிது கடினம் தான். வெளி மனம் நமது அன்றாட செயற்பாடுகள், நாளாந்த தேவைகளை பதிந்து வைத்துக் கொள்ளும். இது காலப்போக்கில் தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொண்டு அவசியமற்றதை மனதிலிருந்து அழித்துவிடும். அதனால்தான் நாம் தோல்விகளையும் அவமானங்களையும் மறந்து வாழமுடிகிறது. உள் மனம் அபார சக்தி வாய்ந்தது. உள்மனதில் பதியப்பட்ட விடயங்கள் என்றும் அழிந்துவிடாது. நமது வாழ்க்கையில் இடம்பெறுகின்ற மிகவும் பாதிக்கத்தக்க நிகழ்வுகள் நம் உள் மனதில் பதிந்துவிடுகிறது. உள் மனதில் பதியப்பட்ட விடயங்கள் தவறாக இருந்தாலும் நாம் அதை நம்ப ஆரம்பித்துவிடுவோம். நமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுவது வெளிமனமாக இருந்தாலும், அதற்கு ஆதாரமாக இருப்பது உள் மனம் தான். உள் மனதில் பதிந்துள்ள நிகழ்வுகள், எண்ணங்கள், இலட்சியங்கள் என்பவற்றின் அடிப்படையிலேயே நமது வெளிமனம் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுகிறது.

                    சரி,இந்த மனங்களிற்கும் ஹிப்னாடிஸத்திற்கும் என்ன தொடர்பு என்பது பற்றி பார்ப்போம். ஹிப்னாடிஸத்தின் போது வெளிமனதை தூங்கச் செய்து உள்மனதோடேயே உரையாடுகின்றனர். இதன்போது உள் மனதில் பதிந்துள்ள நிகழ்வுகளை அவர்கள் மூலம் கேட்டு அறிந்து கொள்ள முடியும். இந்த வகையிலேயே ஹிப்னாடிஸம் ஒரு மருத்துவ முறையாக பயன்படுத்தப்படுகிறது. மன உழைச்சல், உள நலப்பாதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் வெளிமனதை ஹிப்னாடிஸத்தின் உதவியுடன் தூங்கச்செய்து, அவர்களின் பிரச்சனைகளை உள்மனதிடம் கேட்டு அறிந்து கொள்ள முடியும். அத்துடன் பிரச்சனைக்குரிய தீர்வுகளை நோயாளிகளின் உள் மனதில் பதியும்படி சொல்கின்ற போது, அவர்கள் அதை அவ்வாறே நம்பி குணமடைந்து விடுவார்கள். ஹிப்னாடிஸத்தின் இந்த கருத்தையே 'அந்நியன்' திரைப்படத்தில் சங்கர் உபயோகித்திருந்தார். அதாவது, அம்பியாகிய விக்ரமின் மனதில் உண்டான தாக்கங்களை அறிந்து கொள்வதற்காக விக்ரமை ஹிப்னாடிஸம் செய்வதாக அந்தக் காட்சி அமைந்திருந்தது.
                                   மருத்துவ முறையாக மட்டுமல்லாது, ஒருவரை பழிவாங்கும் எண்ணத்துடனும் ஹிப்னாடிஸத்தை பயன்படுத்தகூடிய சாத்தியங்கள் உண்டு. ஆனால் ஹிப்னாடிஸம் என்ற கலையில் அதனை அழிவுக்காக பயன்படுத்துவது அனுமதிக்கப்படவில்லை.




ஹிப்னாடிஸம் பற்றிய சில குழப்பங்கள்

ஹிப்னாடிஸம் செய்பவர்கள் தமது விரல்களை அல்லது சிறு தடியை சுற்றிக் கொண்டிருப்பது ஏன்?
                              இது தொடர்பான சில வீடியோக்கள் பார்க்கும் போது ஹிப்னாடிஸம் செய்பவர்கள் தமது விரல்களை அல்லது சிறு தடியை சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதற்கான காரணம் அலைந்து கொண்டிருக்கும் நம் வெளிமனதை ஏதாவதொன்றில் நிலைக்க செய்து தூங்க வைப்பதற்காகவாகும். ஆனால் ஹிப்னாடிஸம் செய்யும் அனைவரும் அதை உபயோகப்படுத்துவதில்லை. ஹிப்னாடிஸத்தை மையப்படுத்தி ரவிபாபுவின் இயக்கத்தில் ரவிபாபு, சினேகா மற்றும் பூமிகா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த 'அமராவதி' என்ற திரைப்படத்தில் இது அழகாக காட்டப்படுகிறது. இத் திரைப்படம் தமிழில் 'யார்' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டிருந்தது.

ஹிப்னாடிஸம் தான் நோக்கு வர்மமா?
                            எனது தேடலில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஹிப்னாடிஸமே தமிழில் நோக்குவர்மம் என அழைக்கப்படுகிறது. ஆனால் இரண்டும் ஒன்றா என்பது குழப்பத்திற்குரியதே. நோக்கு வர்மத்தில் பார்வையின் மூலம் மற்றவருடைய மனதை கட்டுப்படுத்த முடியும். விளக்கமாக சொல்வதானால் சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது நோக்கு வர்மமே. ஒருவரின் அனுமதியின்றி யாரையும் ஹிப்னாடிஸம் செய்துவிட முடியாதென மேலே குறிப்பிட்டிருந்தேன். ஆனால் பார்வையாலே மற்றவர்களின் அனுமதியின்றி நம் கட்டளைகளை மற்றவர்களின் மனதிற்குள் பதிக்க நோக்கு வர்மத்தால் முடிகிறது. எனவே நோக்குவர்மமும் ஹிப்னாடிஸமும் ஒன்றல்ல என்ற முடிவுக்கு வரமுடிகிறது. நோக்கு வர்மத்தின் ஒரு துளியே ஹிப்னாடிஸம் எனக் கொள்ளமுடியும்.
                              நோக்கு வர்மம் கி.பி 500ம் ஆண்டுகளில் இந்திய தமிழரான போதி தர்மரால் பரப்பபட்டது. ஆனால் ஹிப்னாடிஸம் கி.பி 1800ம் ஆண்டுகளிலேயே வளர்ச்சியடைந்தது. இந்த சந்தர்பத்தில் தமிழரென்ற ரீதியில் ஒரு முறை பெருமைகொள்ள முடிகிறது.

நோக்கு வர்மம் இன்று நடைமுறையில் இருக்கின்றதா?
                       நோக்கு வர்மம் அழிந்துவிட்டது, இன்றைய நாட்களில் அது ஒரு கண்கட்டிவித்தை மட்டுமே, இது பொய்யென நிருபிக்க முடியும் என சில கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சந்தேகத்தை தீர்ப்பதற்கான தேடலில் Vijay TV யில் 'நடந்தது என்ன' என்ற நிகழ்சியில் இடம்பெற்ற நோக்கு வர்மம் தொடர்பான ஒரு Video  கிடைத்தது. இந் நிகழ்ச்சியில் நோக்கு வர்மம் இன்னமும் கேரளாவில் நடைமுறையில் உள்ளதென்பதை உறுதிப்படுத்தியிருந்தார்கள். அதற்கான இணைப்பை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 


                                ஹிப்னாடிஸம், நோக்கு வர்மம் இவை ஒரு கடல் இதை முழுமையாக கடந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உளவியல் ரீதியான ஹிப்னாடிஸமானது மன உழைச்சல் நிறைந்த இக் காலத்தில் எவ்வளவு முக்கியமானதோ, தீய வழியில் பயன்னபடுத்தும் போது அதை விட ஆபத்தாக மாறிவிடும் என்பது உண்மையே!




-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்-


7 comments:

  1. இன்று தான் தங்கள் தளம் நுழைகிறேன்...

    பதிவின் ஆழம் மிகவும் நுட்பமாய் இருக்கிறது...

    நோக்கு வர்மத்துடன் ஒப்பிட்ட விதம் புதிய தகவல்களை கொடுத்திருக்கிறது

    நன்றியுடன் ம.தி.சுதா

    www.mathisutha.com

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றிகள்

      Delete
  2. இன்னும் தரவுகள் தேவைப்படுகிறது

    ReplyDelete
  3. http://youtu.be/fBU_mv3KQe0 இது உபயோகத்தில் இல்லை

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

என் கிறுக்கல்ளுக்கான உங்கள் கருத்துக்களை பகிருங்கள்