19 September 2012

இதெல்லாம் எப்படி சாத்தியம்???


                         நாம எப்போதும் அலுத்துக்கொள்ற விடயம், 'ஐயோ வாழ்கையில இன்ரஸ்டே வரமாட்டேங்குது, ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியே போய்கிட்டிருக்கு' என்பது தான். கொஞ்சம் ஆச்சரியங்கள், மாற்றங்கள், எதிர்பார்க்காத விடயங்களை வாழ்க்கையில் எதிர்பார்க்கிறோம். அவை சில நேரங்களில் வலிக்க செய்தாலும் இப்படி ஏதேனும் வந்தால் தான் வாழ்க்கை சூடு பிடிக்கிறது. ஆனாலும் நம்ம வாழ்கையில நடக்கிற ஒவ்வொரு விடயங்களுக்கும் என்ன காரணம் என்பது எம்மால் புரிந்துகொள்ளக்கூடியதே. உதாரணமாக எதிர்பாரத விதமாய் உங்களுக்கு ஒரு லொட்டரி அதிஷ்டம் கிடைத்தால் அதன் காரணம் எம்மால் புரிந்து கொள்ள முடியும். அதாவது எப்படியோ யாரோ ஒருத்தருக்கு போக வேண்டியது உங்க இலக்கம் தெரிவு செய்யப்பட்டதால் அது உங்களுக்கு கிடைக்கிறது. அவ்வளவு தான்.


                           ஆனால் உலகத்தில் இடம்பெறும் சில ஆச்சரியமான நிகழ்வுகளுக்கு எம் பகுத்தறிவை கொண்டு காரணம் கற்பித்துவிடமுடியாது. அறிவியல், ஆன்மீகம் என்பவற்றினால் கூட சில ஆச்சரியப்படக்கூடிய சம்பவங்களுக்கு விளக்கம் கொடுக்க முடிவதில்லை. அத்தகைய சில நிகழ்வுகளை இங்கே பதிவிடுகிறேன். இதையெல்லாம் படிச்சிட்டு, இது எப்படி சாத்தியம் என்று குழம்பிட்டு இருந்தேன், இப்போ நீங்களும் என்னோடு சேர்ந்து கொஞ்சம் குழம்புங்களேன்.

Titan Vs Titanic
                     1898 இல் மோர்கன் ரொபேட்ஸன்(Morgan Robertson) என்பவர் 'டைட்டனின் அழிவு அல்லது நாசம் (The Wreck of the Titan or Futility) என்று ஒரு நாவல் எழுதினார்.  உலகிலேலேயே மிகப்பெரிய 'டைட்டன்' என்ற சொகுசுக் கப்பல் ஐஸ் பாறை ஒன்றில் மோதி கடலுக்குள் மூழ்கி பலர் இறந்து போகிறார்கள் என்பது தான் கதை. அட டைட்டானிக் மோதின சம்பவத்தை காப்பியடிச்சு நாவலா எழுதிட்டாரு என்று யோசிக்கிறீங்களா? இல்லை! நாவல் எழுதப்பட்டது 1898 இல், டைட்டானிக் கப்பல் மூழ்கியது 1912 ஏப்ரல்14 இல். நாவல் வெளிவந்த போது டைடானிக்கின் வடிவமைப்பு வேலைகள் கூட தொடங்கவில்லையாம். டைட்டன், டைட்டானிக் என்று பெயர்கள் மட்டுமல்ல நாவலில் குறிப்பிட்ட கப்பலின் கொள்ளளவு, நீள அகலங்கள், வேகம் என்பன கூட ஒத்துப்போகின்றனவாம். இது எப்படித்தான் சாத்தியமோ? சந்தேகம் இருந்தால் அந்த புத்தகத்துக்கான இணைப்பை இங்கே பகிர்து கொள்கிறேன் வாசித்துப்பாருங்கள்.


தாமதத்தால் காப்பாற்றப்பட்டவர்கள்
                             இது Life என்ற பத்திரிகையில் வெளியான உண்மை சம்பவம். அமெரிக்காவின் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் பீட்றைஸ் என்ற இடத்தில் உள்ள Church ஒன்றில் 1950 மார்ச் 1ம் திகதி 15 பேர் இணைந்து காலை 7.20 க்கு பாடுவதாக ஒரு நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறுவேறு காரணங்களால் அங்கு வருவதற்கு தாமதமாகிவிட்டது. ஒருவர் ரேடியோ கேட்டுகொண்டிருந்நதாலும், இன்னொருவர் படித்துக் கொண்டிருந்ததாலும், வேறொருவருக்கு கார் பிரச்சனை கொடுத்ததாலும் இப்படி வேறுவேறு காரணங்களால் வர தாமதமானது. குறிப்பிட்ட Church இல் காலை 07.25 க்கு குண்டு வெடித்ததில் Church தரைமட்டமானது. இவர்கள் தாமதமாக வந்ததால் உயிர் பிளைத்துக் கொண்டனராம்!!!! 


ஜோசப் டி லூயிஸ் 
                       அமெரிக்காவை சேர்ந்த முடிதிருத்த கலைஞரான ஜோசப் டி லூயிஸ் என்பவர் 1969 ஜனவரி 16ம் திகதி சிக்காகோ நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றினுள் சென்று 'பேப்பர் கொடுங்க, ரயில் விபத்தை பற்றி என்ன போட்டிருக்காங்க என்று பாக்கணும்' என்று சொன்னாராம். 'விபத்தா? எங்க? எப்ப?  பேப்பரில ஏதும் இல்லையே' என்று மற்றவங்க சொன்னாங்களாம். 'இங்கிருந்து தெற்குப் பக்கத்தில 2 ரயில் பனிமூட்டத்தில மோதி நிறையபேரு செத்திட்டாங்க' என்றாராம் ஜோசப். அதுக்கப்புறம் றேடியோ போட்டு பாத்தால் ஏதுவுமே சொல்லல. இரண்டு மணிநேரம் கழித்து தான் அப்படி ஒரு விபத்து தற்போது நடந்தது என்று றேடியோவில சொன்னாங்களாம். விபத்து இடம்பெற முன்னரே ஜோசப்பிற்கு இப்படி ஒரு விபத்து நிகழ்ந்ததாக மனதில் தோன்றியிருக்கிறது. அதை தொடர்ந்து எதிர்வரப்போகும் விபத்துக்கள் பற்றி எதிர்வு கூறி நிறைய பலித்தும் உள்ளனவாம்!!!!


மன்னரும் ஹோட்டல் உரமையாளரும்
              1900 ம் ஆண்டு ஜூன் மாதம் இத்தாலிய அரசர் உம்பர்டோ ஒரு ஹோட்டலுக்கு உணவருந்த சென்ற போது ஹோட்டல் உரிமையாளர் தோற்றத்தில் அவரைப் போலவே இருந்தார். அவரை கூப்பிட்டு கதைத்த போது அவர் பெயரும் உம்பர்டோ என்று தெரிய வந்தது. இருவர் மனைவியின் பெயரும் மார்கரிட்டா. மன்னர் முடி சூட்டிய அதே நாளில் தான் அவரும் ஹோட்டலை தொடங்கியிருந்தார். இருவரும் பிறந்தது 14-03-1844 இல். அதன் பின் ஒரு மாதம் கழித்து 29-07-1900 இல் ஹோட்டல் உரிமையாளர் துப்பாக்கி சூட்டில் சற்று முன் காலமானார் என்ற செய்தியை மன்னர் கேள்விப்பட்டார். சில மணிநேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்!!!!  


மின்னலின் கொலைவெறித்தனம்
               மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்து ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதலாம் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டு வலது பக்கமும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விட்டுவிடவில்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதறிப்போனது!!!!


இரட்டை சகோதரர்கள்
                     Ohio வில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன .40 வருடங்களுக்கு முன் இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alen என்றும் இன்னொருவர் James Allen என்று ஒரு "L" எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்கு Toy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து 1979 இல் அவர்களுக்கு 39 வயசாகும் போது இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்!!!!




                            இதெல்லாம் எப்படி நடக்குது?? நம்மள மீறின சக்தி ஏதாவது இருக்கா?? என்று யோசிக்க போனால் குழப்பம் தான் மிச்சம்! எதிர்கால விஞ்ஞானமும் அறிவியலும் தான் இவற்றை கொஞ்சம் தெளிவுபடுத்த வேண்டும். இப்போதைக்கு என்னுடன் சேர்த்து உங்களையும் கொஞ்சம் குழம்ப வைத்ததில் திருப்தியே.....!!!



-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்-

4 comments:

  1. Really Nice. தேடல் உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் உற்சாகத்துக்கு நன்றிகள்

      Delete
  2. நல்ல முயற்சி தொடருங்கள்...இவற்றிற்கு ஒற்றைவரியில் ஒரு விளக்கம் இருக்கின்றது யஸ்ட் கோ இன்ஸிடன்ஸ்..ஏற்றுக்கொள்வது அவரவர் மனதைப்பொறுத்து

    ReplyDelete
    Replies
    1. நன்றி. நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும் சுவாரஸ்யமான உண்மைகள்

      Delete

என் கிறுக்கல்ளுக்கான உங்கள் கருத்துக்களை பகிருங்கள்